Monday, April 19, 2010

'ரேனிகுண்டா' எனது பார்வையில்...


ஒரு சாதாரண 'மிடல் கிளாஸ்' குடும்பத்தில் பிறந்தவன் கதையின் நாயகன், சக்தி. இவனை எப்படியாவது ஒரு பொறியியல் வல்லுனராக ஆக்கிவிடுவது என்பது இவனது தந்தையின் கனவு. ஆனால், இவனுக்கோ படிப்பு வரவில்லை. அதட்டும் அப்பாவாக இல்லாமல், மகனால் என்ன முடியுமோ, அதைச் செய்யட்டும் என மனதைத் தேற்றிக் கொள்ளும் அன்பான அப்பா, கண்டிப்பான அம்மா என சக்தியின் குடும்பம் இன்பத்தில் மிதக்கின்றது.

ஒரு நாள், சக்தியின் கண் முன்னே, தனது பெற்றோர்கள் கொடூரமாகக் கொல்லப் படுகின்றனர். சக்தியின் அப்பா, தன் நண்பர் படுகொலைச் செய்யப் பட்டதைக் கண்ணால் பார்த்த ஒரே சாட்சி. கொலையாலி (கதிர்) பல முறை மிரட்டிப் பார்த்தும், இவர் மசியவில்லை. ஊரே வேடிக்கைப் பார்க்க சக்தியின் தாய் தந்தையினர் அழிக்கப் படுகின்றனர்.

ஒரே நாளில், தன் வாழ்க்கை இருண்டு போய்விட்டதே என துவண்டு கிடந்த கதையின் நாயகன், தன் பழியைத் தீர்க்க முற்படுகிறான். ஆத்திரமும் பழி வாங்கும் எண்ணமும் மட்டும் இருந்தால் போதுமா? தைரியம் இல்லாமல், கத்தியைத் தூக்கிக் கொண்டு கதிர் முன் நிற்க, அடித்து காவல் நிலையத்தில் ஒப்படைக்கப் படுகிறான். பதினான்கு நாட்கள் சிறையில் அடைக்க தீர்ப்பு வழங்கப் படுகிறது.

கூட்ச சுபாவம் நிறைந்த சக்திக்கு, ஜெயிலர்கள் மூலம் பல அவதூறுகள். அடி, உதை என பத்தொண்பது வயதில் தாங்கிக் கொள்ள முடியாத கொடுமைகளை எதிர் நோக்க வேண்டிய கட்டாயம். அங்கு தான் அந்த நான்கு பேரையும் முதன் முதலாக சந்திக்கிறான். அவர்களுக்கு வயது பத்தோண்பதிலிருந்து இருபத்து நான்கு வரை தான், ஆனால் ஒவ்வொருவர் மேலும் பல வழக்குகள். சிறையினுள்ளே இவர்கள் வைத்தது தான் சட்டம். ஜெயிலர்களுக்கு கூட இவர்களின் மேல் ஒரு அச்சம் இருக்கும். அடி, மிதிபடும் சக்தியின் மேல் ஒரு கருனை பிறக்கிறது இவர்களுக்கு, தங்கள் வசம் வைத்து அடைக்கலம் கொடுக்கின்றனர். சக்தியும் வேரு வழியில்லாமல், ஜெயிலர்களின் கொடுமையிலிருந்து தப்பிக்க அந்த கூட்டத்தில் ஒருவனாக சேர்கிறான். சிறையிலிருந்து தப்பிக்கும் போது, அவர்கள் சக்தியையும் உடன் அழைத்துச் செல்கின்றனர்.


சக்தியின் பெற்றோரின் படுகொலையை அறிந்து கொண்ட அவர்கள், அந்த கொலையாலி கதிரைத் தீர்த்துக் கட்ட உதவுகின்றனர். அதன் பிறகு, காவல் துறையின் கண்களில் மண்ணைத் தூவும் விதத்தில், மும்பைக்கு ஒரு இரயிலின் மூலம் பயணம். சந்தர்ப்ப சூழ்நிலை, ரேனிகுண்டாவில் இறங்கி அங்கு ஒரு குண்டர் கும்பலின் சகவாசம் இவர்களுக்கு ஏற்படுகிறது. ரேனிகுண்டாவில் சக்தி ஒரு பெண்ணைப் பார்க்கையில் இருவருக்கும் காதல் மலர்கிறது. கதானாயகிக்கு பேச்சும் வராது, காதும் கேட்காது என்பது குறிப்பிடத்தக்கது. தன் நண்பர்களின் தூண்டுதலுகினங்க சக்தி தன் காதலியுடன் எங்கேயாவது சென்று ஒரு நிம்மதியான வாழ்க்கை வாழ முடிவெடுக்கிறான்.

இதற்கிடையே, ஒரு பெரும்புள்ளியைப் போட்டுத் தள்ள அந்த குண்டர் கும்பலால் இவர்கள் துண்டப் படுகிறார்கள். அந்த முயற்சி தோல்வியடைய, நண்பர்களில் ஒருவன் (பெயர் பாண்டு, இவன் தான் தலைவன் போலும்) அந்த இடத்திலேயே அடித்துக் கொல்லப் படுகிறான். பல நாட்களாக இவர்களைத் தேடிக் கொண்டிருக்கும் காவல் துறையினரோ எப்படியோ ரேனிகுண்டாவை வந்தடைகின்றனர். என்னதான் இவர்கள் பல சட்ட விரோத காரியங்களில் ஈடுபட்டவர்கள் என்றாலும், ஒவ்வொருத்தராக காவல் துறையின் துப்பாக்கிக்கு பலியாகும் போது ஒரு பரிதாபம் ஏற்படுவது உண்மை. இறுதியில் அனைவரும் சுட்டுத் தள்ளப் படுகின்றனர், சக்தியைத் தவிர. காவல் துறையினர் ஒரு புறம் தீவிரமாகத் தேட, சக்தி அவர்களிடமிருந்து தப்பித்தானா, தன் காதலியுடன் ஒன்று சேர்ந்தானா என்பது மீதி கதை, அதாவது 'க்லைமாக்ஸ்'.

மிகவும் விருவிருப்பான திரைக்கதை படத்தைத் தாங்கிப் பிடிக்கின்றது. நகைச்சுவை, காதல், நட்பு, பாசம் என எல்லா அம்சங்களும் போதுமான சம அளயில் தெலிக்கப்பட்டுள்ளது. வசனகர்த்தாவை பாராட்டியே தீர வேண்டும். என்ன ஒரு இயல்பான வசனங்கள். நண்பர்கள் ஜெயிலர்களிடம் பேசும் கிண்டல் கலந்த வசனங்கள் மற்றும் மது அருந்தும் போது தங்களுக்கிடையே பேசும் பேச்சுகள் அனைத்தும் ரசிக்க வைக்கின்றன; வசனகர்த்தா தணித்து நிற்கிறார்.


நண்பர்களில் ஒருவன் ஜெயிலரிடம், "போய், சாம்பாருக்கு உப்பு இருக்கா பாருங்க", என்பதாகட்டும், மற்றொரு (வயதான) ஜெயிலரைப் பார்த்து பயந்த சக்தியிடம், 'இந்த ஆளுக்கா பயந்தே, இந்தாளுக்கெல்லாம் பயப்படாத' என்ற காட்சியாகட்டும், அதே ஜெயிலர் அறிவுரைக் கூறும்போது தெனாவட்டாக பதில் சொல்லும் காட்சியாகட்டும், திரையில் மிக துள்ளியமாக வளம் வந்து மனதில் நிற்கும் காட்சிகள் அவை. இயக்குணர் பண்ணீர்செல்வத்தின் முதல் படம் என நினைக்கிறேன். அசத்தியிருக்கார், இவருக்கு ஒரு சல்யூட். பிண்ணனி இசையும் பாடல்களும் படத்தோடு ஒன்றி வருகின்றன. நாயகனுக்கும் நாயகிக்கும் ஏற்படும் காதல் கனங்கள் மழையின் பிண்ணனியில் அழகாக ஒரு பாடலில் மூலம் காண்பிக்கப்படுகின்றது. அப்பாடலும் சரி, ஒளிப்பதிவும் சரி நினைவில் நிற்கின்றது.

  • எனக்கு பிடித்த விசயம்


  • அவர்கள் நால்வரும் குற்றவாளிகள் தான். ஆனால், அவர்களுக்கும் ஒரு கருணை குணம் உள்ளதை கதை மிக அழகாக சொல்கிறது. தாங்கள் தான் சீரழிந்து விட்டார்கள், நண்பனாவது (சக்தி) தன் காதலில் ஜெயித்து ஒரு நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என ஆசைப்படும்போது இவர்களது நட்புணர்வு மெய்சிலிர்க்க வைக்கின்றது. இன்றைய தேதியில் இப்படி பட்ட நண்பர்கள் (அதாவது குற்றவாளிகளாக இருந்து) தங்கள் நண்பர்களும் தங்களோடு சீரழிந்து போக வேண்டும் என தான் விரும்புவர். சக்தியின் காதலுக்காகவும் நல்ல வாழ்க்கைக்காகவும் மெனக்கெடும் அந்த நால்வரின் நல்லெண்ணமும் நட்பும் என்னை வெகுவாக கவர்ந்தது; பாராட்டக்கூடியது.

  • எனக்கு பிடிக்காத விசயம்


  • இது போன்ற படங்களின் அதிகரிப்பு நமது சமுதாயம் இன்னும் சீர்குலைய வழி வகுக்கின்றது. முன்பே சொன்னது போல, ஜெயிலர் ஒருவர் இவர்களுக்கு புத்திமதி சொல்லப் போய், அதற்கு இவர்களில் ஒருவனின் எகத்தாளம், தெனாவட்டு கலந்த பதில்களை நீங்கள் கேட்க வேண்டும். நல்லவனைக் கூட பணத்திற்க்காக குறுக்கு வழியில் இட்டுச் செல்லும் கூர்மையான சொற்கள் அவை. இதோ உங்களுக்காக:

    ஜெயிலர்: ஏண்டா, இந்த வயசுல தலைக்கு பத்து பத்து கேசு வச்சுருக்கீங்கலே. உங்க வாழ்க்கை எல்லாம் என்னடா ஆகுறது? ஒரு வேலை வெட்டி பார்த்து பிழைக்கக் கூடாதா?

    ஒருவன்: வேலை வெட்டிக்கு போயி, இன்னா சம்பாரிக்க போறோம்? உனக்கென்ன சம்பலம்? மாசம் ஃபுள்ளா உள்ள சுத்துனா ஒரு ஏழாயிரம் ருவா தருவாய்ங்களா? நாங்க ஒன்னு பண்ணா போதும் பத்தாயிரம் ரூவாய்க்கு மேலலாம் வாங்கிருக்கோம். தெரியும்ல...

    ஜெயிலர்: எண்டா, காசு பணத்துக்காக ஒரு உயிரை பதபதைக்க கொல்லுறீங்களே... பாவம் இல்லையாடா?

    ஒருவன்: ஞாயித்துக் கெழமையானா, கறி தின்னுறதுக்கு நீ ஆடு கோழி அருக்குறது இல்லையா, அந்த மாதிரி தான். பணத்த விடு ஏட்டைய்யா, ஆளை பார்த்தா ஒரு பயம் வர வேண்டாமா...
    நேத்து அந்த பயல போட்டு (சக்தியை) அந்த அடி அடிச்சாங்களே, யாராவது கேட்டீங்களா? என்ன அடிக்க சொல்லுங்க பார்க்கலாம். சும்மா ஒரு அடி அடிக்க சொல்லுங்களேன் பார்க்கலாம். நீ பீ.சி தானே, கைல லத்தி வச்சுருகேல்லே... எங்க ஒரு அடி அடி பார்க்கலாம். சும்மா ஒரு அடி அடி பார்க்கலாம். எங்க போனாலும் சரி, எத்தன வருஷம் ஆனாலும் சரி, தேடி வந்து சங்க அறுப்போம்ல... சும்மா வருமா பயம்... நாலஞ்சு பண்ணா தான்னுய்யா பயப்படுறீங்க. கெளம்பு கெளம்பு. டெண்சன கெளப்பாதீங்கய்யா போய்யா... போ போ கெளம்பு...


    ஜெயிலர்: தலை எழுத்து டா...

    அதற்காக, இன்றைய சமுதாயத்தாய இளைஞர்கள் ஒழுக்கமாக இருக்கிறார்கள் என சொல்லவில்லை. இது போன்ற வசனங்கள் கலந்த படங்கள் இவர்களுக்கு குண்டர் கும்பல், அயோக்கியத்தணம் போன்ற சட்ட விரோத செயல்களில் இறங்க ஒரு ஊக்குவிப்பாக அமைகிறது என்பதே எனது ஆதங்கம்.

    6 comments :

    1. இந்த படம் making நன்றாக இருந்தது. ஆனால் எதார்த்தம், நிதர்சனம் என்று அதிக வன்முறை, தவறான கருத்துக்கள் எல்லாமே நம் அடுத்த தலைமுறையை கண்டிப்பாக பாதிக்கும்.
      ஒரு விஷயம். படத்தில் வரும் ஊர் ரேணிகுண்டாவே அல்ல. தொண்ணூறு சதவீதம் விருதுநகரில் எங்கள் தெருவில் எடுக்கப்பட்டது.

      ReplyDelete
    2. கண்டிப்பாக உங்கள் கருத்துகளுடன் நான் ஒத்து போகிறேன்.. நேற்று உங்கள் பதிவை படித்த பின்னர்தான் பார்த்தேன் படம் விறுவிறுப்பாக செல்லும் , முடிவு நம் மனதை சலனபடுத்தி விடும்.. நான் பார்த்து கண்கலங்கிய படங்களில் இதுவும் ஒன்று... ஆனால் அதீத வன்முறை கண்டிப்பாய் தவிர்க்கப்பட வேண்டும்.... குறிப்பாய் நீங்கள் எழுதி இருக்கும் அந்த வசன காட்சி , நானும் அதை பார்க்கும் பொழுது நீங்கள் சொன்னதை உணர்ந்தேன்...

      ஹீரோ நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தியின் மகனாம்... ஆனால் அவரை விட அவர் நண்பனாய் வரும் அந்த குள்ளன் படத்தில் பட்டய கிளப்பிருப்பான்....
      பாலா சொல்லியதை போல இந்த படம் எங்கள் விருதுனகரில்தான் எடுக்கப்பட்டது....

      ReplyDelete
    3. தமிழ் சினிமாவில் வந்த சிறந்த படங்களில் இதுவும் ஒன்று. ஆனால் வன்முறை அதிகம்.

      ReplyDelete
    4. @Bala

      உங்கள் கருத்துடன் ஒத்துப் போகிறேன். விருதுநகரா? என்னைப் போல் வெளியில் உள்ளவர்களுக்கு இதெல்லாம் தெரிவதில்லை. :P
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. மீண்டும் வருக. :)

      ReplyDelete
    5. @ராஜா

      அட, என் பதிவைப் படித்த பிறகு தான் படம் பார்த்தீர்களா, கேட்க சந்தோசமாக உள்ளது. நல்ல படத்தை சிவாரிசு செய்திருக்கிறேன் என்று நம்புகிறேன்.

      //ஹீரோ நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தியின் மகனாம்...//

      இது முன்னரே தெரிந்திருந்தால், இந்த படத்தைப் பார்த்திருப்பேனா என்பது சந்தேகம். ஹிஹி

      //ஆனால் அவரை விட அவர் நண்பனாய் வரும் அந்த குள்ளன் படத்தில் பட்டய கிளப்பிருப்பான்....//

      ஆம், அவனது நடிப்பு மட்டும் மனதில் நிற்கிறது.

      //பாலா சொல்லியதை போல இந்த படம் எங்கள் விருதுனகரில்தான் எடுக்கப்பட்டது....//

      நீங்களும் விருதுனகர் காரரா??? இந்தியா வரும்போது கண்டிப்பாக விருதுனகர் வர வேண்டும் போலிருக்கே...
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. மீண்டும் வருக. :)

      ReplyDelete
    6. @அக்பர்

      ஆம், நண்பரே... இது ஒரு நல்ல படைப்பு என்பதில் சந்தேகம் இல்லை.
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. மீண்டும் வருக. :)

      ReplyDelete