Showing posts with label General. Show all posts
Showing posts with label General. Show all posts

Friday, December 31, 2010

பாட்டு கேட்கவா - தொடர் பதிவு

ஆரம்ப காலம் முதலே, என்னைத் தொடர்ந்து ஊக்குவித்து வரும் சக தோழர் ராஜா அவர்களின் அழைப்பை விடுத்தே இந்த தொடர் பதிவு. இதுவரை என்னை யாரும் தொடர்பதிவிற்கு அழைத்ததில்லை. என்னையும் ஒரு பதிவராக ஏற்று அழைத்தமைக்கு ராஜா அவர்களுக்கு நன்றிகள் பல.
என்னைக் கவர்ந்த, நான் எப்போதும் முனுமுனுக்கும் பெண்கள் குரலில் வெளிவந்த பாடல்கள் பல. பட்டியலை மேலும் சுருக்கி அவற்றுள் பத்தை மட்டும் எல்லோரையும் போல தொகுப்பாக வழங்குகின்றேன். இந்த பத்து பாடல்களும் இதற பாடல்களிலிருந்து தணித்து நின்றதால் பட்டியலை சுருக்கும்போது எந்தவொறு கஷ்டமும் எனக்கு ஏற்படவில்லை. இதோ உங்களுக்காக...

1. பார்த்த ஞாபகம் இல்லையோ (sad version)

படம்: புதிய பறவை (1964)
இசை: எம்.எஸ் விஸ்வநாதன்-ராமமூர்த்தி
வரிகள்: கண்ணதாசன்
பாடியவர்: பி. சுசிலா

இதில் இரண்டு வகைகள் (version) உள்ளன. எனக்கு மிகவும் பிடித்தது சோக பிண்ணணி பாடல். 'பியானோவில்' (piano) ஆரம்பமாகி 'அ...ஆஆஆ' என்று பாட ஆரம்பிப்பார், அங்கேயே நான் அடிமை. என்னைப் பொருத்தமட்டிலும், இந்த பாடலை வீழ்த்த எந்த பாடலும் வந்ததில்லை, இனி வர போவதும் இல்லை. பி.சுசிலா அவர்களின் குரலில் வெளிவந்த என்னற்ற பாடல்களில், இப்பாடல் கண்டிப்பாக ஒரு மணிமகுடம். தமிழ் தெலுங்கு சினிமா இரண்டிலுமே கடந்த 40 ஆண்டுகளாக இவரது ஆட்சி தான்.

2. சினேகிதனே

படம்: அலைபாயுதே (2000)
இசை: ஏ.ஆர்.ரகுமான்
வரிகள்: வைரமுத்து
பாடியவர்: சாதனா சர்கம்

அனைத்து பட்டி தொட்டிகளிலும் பட்டையைக் கிளப்பிய ஒரு பாடல். சில இடங்களில், சாதனா சர்கம் உச்சரிப்பில் சொதப்பியிருந்தாலும், இசை மற்றும் வரிகள் அந்த குறைத் தெரியாமல் பார்த்துக் கொண்டன. காதலன் அல்லது கணவன் மேல் உள்ள தன்னுடைய உரிமையை (possessiveness) பாடல் வரிகள் சித்தரிக்கும்.

3. கண்ணாளனே

படம்: பம்பாய் (1995)
இசை: ஏ.ஆர்.ரகுமான்
வரிகள்: வைரமுத்து
பாடியவர்: சித்ரா

ரோஜாவிற்கு அடுத்து, மக்கள் மனதில் ரகுமான் ஒரு இசையமைப்பாளராக மேலும் தன் முத்திரையை அழுத்தம் திருத்தமாக பதிக்க முக்கிய பங்காற்றியது 'பம்பாய்' ஆல்பம். அதில் இந்த ஒரு பாடல் மிக முக்கியமானது. இப்பாடலின் சாயலிலே, 'சொல்லாமலே யார் கேட்டது' எனும் பாடல் ஒன்று பிற்பாடு வெளிவந்தது. ஆனால், இந்த பாடல் போல பிரபலம் அடையவில்லை.


4. எவனோ ஒருவன்

படம்: அலைபாயுதே (2000)
இசை: ஏ.ஆர்.ரகுமான்
வரிகள்: வைரமுத்து
பாடியவர்: சுவர்னலதா

தனிமையில் இருக்கும்போது கேட்க வேண்டிய பாடல். காதலர்கள் பிரிந்த வலியை சித்தரிக்க இப்பாடலுக்கு நிகர் வேறெந்த பாடலும் கிடையாது. பிரிந்த காதலர்களின் நெஞ்சை கணமாக்கி கண்டிப்பாக அவர்களின் கண்களில் கண்ணீரை மல்க வைக்கும் ஒரு அற்புத படைப்பு. துயரம், தேடல், ஏக்கம் போன்ற உள்ளுணர்வுகளை தன் குரலின் மூலம் சுவர்னலதா பரை சாற்றியிருப்பார். இப்போது இவர் உயிரோடு இல்லையென்றாலும் தனது பாடல்களின் வழி நம்மிடையே எப்போதும் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார். இவர் இல்லாமை தமிழ் சினிமா இசைத் துறைக்கும் சரி நமக்கும் சரி ஈடுகட்ட முடியாத இழப்பு. இசையைப் பற்றி நான் சொல்லிதான் அறிய வேண்டும் என்றில்லை. எப்பேற்பட்ட உணர்சியையும் இசையால் வெளிகொண்டு பிரதிபலிக்க முடியும் என்பதற்கு இப்பாடலின் இசை ஒரு சான்று.

7. ஒரு தெய்வம் தந்த பூவே

படம்: கண்ணத்தில் முத்தமிட்டால் (2002)
இசை: ஏ.ஆர்.ரகுமான்
வரிகள்: வைரமுத்து
பாடியவர்: சின்மயி

இப்பாடலில் வரும் அனைத்து அம்சங்களும் அபாரம். வளர்ப்பு மகளைப் பற்றி மிக அழகாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் பாடுவது போல் காட்சி அமைந்திருக்கும். சோகம், பெருமை, இன்பம் போன்ற உணர்வுகளின் கலவைகளை இப்பாடலில் சின்மயி கனகட்சிதமாக வெளிபடுத்தியிருப்பார். ரகுமான் அறிமுகப்படுத்திய பல பாடகர்களில் சின்மயி நமக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்.

5. உன்னை நான் சந்தித்தேன்

படம்: ஆயிரத்தில் ஒருவன் (1965)
இசை: எம்.எஸ் விஸ்வநாதன்
வரிகள்: வாலி
பாடியவர்: பி.சுசிலா

ஒரு பக்க காதல் கொண்டு கதாநாயகி நாயகனை எண்ணி உறுகி பாடும் வண்ணமாக இப்பாடல் அமைந்திருக்கும். அதே சமயம், எம்.ஜி.ஆர் அவர்களை நிஜத்திலும் படத்திலும் பிரதிபலிக்கும் விதமாக வரிகள் எழுதப்பட்டிருக்கும். என்ன சொல்வது, அவர் உண்மையிலே ஆயிரத்தில் ஒருவன்(ர்) தான். பி.சுசிலா அவர்கள் இப்பாடலுக்கு குரல் கொடுத்தார் என்று சொல்வதைவிட உயிர் கொடுத்தார் என்று சொன்னால் அது மிகையாகாது.


5. செந்தூரப் பூவே

படம்: 16 வயதினிலே (1977)
இசை: இளையராஜா
வரிகள்: கங்கை அமரன்
பாடியவர்: எஸ்.ஜானகி

தமிழ் பாடல்கள் இருக்கும் வரை, எஸ்.ஜானகி அவர்களின் குரல் அவர் பாடல்களின் வழி நம்மிடையே வேரூன்றி நிற்கும். என்ன ஒரு குரல்வளம். இன்னும் நூராண்டிற்கு பிறகு கேட்டாலும் அதே பிரமிப்பைத் தரக் கூடிய குரல். இப்பாடல் இவருக்கு தன் முதல் தேசிய விருதைப் பெற்று தந்தது.


6. உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல

படம்: இதய கமலம் (1965)
இசை: கே.வி மஹாதேவன்
வரிகள்: கண்ணதாசன்
பாடியவர்: பி.சுசிலா

பி.சுசிலா அவர்களிடமிருந்து மற்றுமொறு அரிய குரல் விருந்து. காதலன் அல்லது கணவனை நினைத்து உருகி, ஏங்கி பாடும் விதமாக இப்பாடல் அமைக்கப்பட்டிருக்கும். இசை, பாடல் வரிகள், பி.சுசிலா அவர்களின் குரல் அனைத்துமே காலத்தால் அழியாதவை.

8. நினைக்க தெரிந்த மனமே

படம்: ஆனந்த ஜோதி (1963)
இசை: எம்.எஸ் விஸ்வநாதன் ராமமூர்த்தி
வரிகள்: கண்ணதாசன்
பாடியவர்: பி.சுசிலா

மீண்டும் பி.சுசிலா அவர்கள் பாடிய பாடல். என்ன சொல்வது, இவரது குரலில் உள்ள ஈர்ப்பு, தெள்ளத்தெளிவான உச்சரிப்பு, காட்சியுடன் ஒன்றி பாடும் விதம் அனைத்துமே இனிவரும் பாடகர்களுக்கு நிச்சயமாக ஒரு முன்னுதாரணம். என்ன தான் பாடல் கேட்க சோகமான தொணியில் இருந்தாலும், அதில் சம்பந்தபட்டவரை மறந்துவிடு என்று தன்னை தானே திட்டி ஆதங்கப்படும் விதமாக வரிகள் செதுக்கப்பட்டிருக்கும்.

10. உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு

படம்: அமர்களம் (1999)
இசை: பரத்வாஜ்
வரிகள்: வைரமுத்து
பாடியவர்: சித்ரா

'தல' பாட்டு இல்லையென்றால் எப்படி. அதற்காக மட்டும் இப்பாடலை நான் பட்டியலில் சேர்க்கவில்லை. இசையமைப்பாளர் பரத்வாஜ் அவர்களை தூக்கிவிட்ட அமர்களம் ஆல்பத்தில் அடங்கிய இப்பாடலை அடிக்கடி கேட்பேன்; எனக்குள்ளே பாடிக் கொள்வேன். காதலி தன் காதலனைப் பார்த்து பெருமைபட்டு, அவனோடு வாழப்போகும் தருணங்களை நினைத்து பாடும் விதம் அருமை. சித்ரா அவர்கள் மிக அழகாக ஆர்பாட்டமில்லாமல், பரவசமாகவும் உல்லாசமாகவும் பாடி கேட்பவர்களின் செவிகளுக்கு இனிமை சேர்த்துவிடுவார். அவருக்கு 'சின்ன குயில்' என்ற அடைமொழி கண்டிப்பாக பொருத்தமானதே.
இப்பாடலில் தல-ஷாலினி அன்னி 'கெமஸ்டிரி' அற்புதம். அஜித் இப்பாடலில் அத்தனை அழகாக இருப்பார்.


ஏற்கனவே சொன்னது போல, என்னைக் கவர்ந்த பாடல்கள் இன்னும் பல.
'Honorable mentions'-ஆக இவற்றையும் சேர்த்துள்ளேன். மன்னிக்கவும்.

11. எங்கே எனது கவிதை (கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்)
12. மார்கழி திங்கள் அல்லவா (சங்கமம்)
13. மார்கழி பூவே (மே மாதம்)
14. கண்ணாமூச்சி ஏனடா (கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்)
15. புல்வெலி புல்வெலி (ஆசை)
16. சின்ன சின்ன ஆசை (ரோஜா)
17. அன்று ஊமை பெண் அல்லோ (பார்த்தால் பசி தீரும்)
18. போறாலே பொண்ணு தாயி (கருத்தம்மா)
19. அக்கம் பக்கம் (கிரீடம்)
20. தூது செல்ல ஒரு தோழி (பச்சை விளக்கு)

நண்பர் ராஜா அவர்களுக்கு:-
தாமதத்திற்கு மன்னிக்கவும். கடந்த இரு மாதங்களாக பல பிரச்சனைகள். கடந்த வாரம் எனது பாட்டி சிவபாதம் அடைந்தார். வேலை பலு ஒரு பக்கம். எனெனில், நீங்கள் அழைத்த கனமே எழுத முடியவில்லை.

அனைவருக்கும் எனது 2011 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். :)
இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க. __/\__

Wednesday, July 14, 2010

அந்த ஒரு நிமிடம்...

எப்படி இருந்த நான்...



இப்படி ஆகிட்டேன்...



அந்த சம்பவம் என் வாழ்க்கையின் திசையையே மாற்றிப் போட்டுவிட்டது...



அந்த ஒரு நிமிடம் நான் சற்று ஜாக்கிரதையாக இருந்திருந்தால்...

Wednesday, July 7, 2010

உலகக் கிண்ண வெற்றியாளர் - ஒரு கணித ஆராய்ச்சி

சமீபத்தில் நண்பர் ராஜா அவர்கள் ஒரு சுவாரசியமான கதையை வழக்கம் போல தனக்கே உரிய பாணியில் சொல்லியிருந்தார். அவர் சொன்ன விசயம் ஒன்று என்னை மிகவும் கவர்ந்தது. அதாவது, எந்த ஒரு ஆராய்ச்சியாயினும் அதனை கணிதம் மூலம் நிரூபணம் செய்தால் உலகம் ஏற்றுக் கொள்ளும். இல்லையேல், 'யாருக்கு காது குத்துற' என்ற எதிர் பதிலோடு நிராகரித்து விடுவார்கள் என்று அழகாக எழுதியிருந்தார். அதைப் படிக்க விரும்பினால் இங்கே செல்லவும்.


உலகக் கிண்ண காற்பந்து போட்டி அரையிருதி சுற்று வெற்றிகரமாக போய்க் கொண்டிருக்கிறது என்று பலரும் அறிவீர். இம்முறை உலகக் கிண்ணத்தை எந்த நாடு தட்டிச் செல்லும் என்ற ஒரு சிறிய ஆராய்ச்சியையே இந்த பதிவு எடுத்துறைக்கிறது, மன்னிக்கவும் கணிதம் மூலம் நிரூபணம் செய்ய் முயல்கிறது.

1. பிரசில் நாடு உலகக் கோப்பையை 1994-இல் வென்றது. அதற்கு முன்னர், 1970-இல் தட்டிச் சென்றது. ஆக இரண்டு வருடங்களையும் கூட்டினால், 1970 + 1994 = 3964.

2. அர்ஜெந்தினா கடைசியாக 1986-இல் வென்றது. அதற்கு முன், 1978-இல் தட்டிச் சென்றது. எனவே இரண்டு வருடங்களையும் கூட்டினால், 1978 + 1986 = 3964.

3. ஜெர்மனி 1990-இல் உலகக் கோப்பையை வென்றது. அதற்கு முன்னர், 1974. இரண்டு வருடங்களையும் கூட்டினால், 1974 + 1990 = 3964.

4. மீண்டும் பிரசிலை பார்த்தோமானால், அவர்கள் 2002-இலும் ஜெயித்தார்கள். 1962-இலும் வெற்றி அவர்களுக்கே. எனவே அவ்விரண்டு வருடங்களையும் கூட்டினால், 1962+ 2002 = 3964.

5. ஆதலால், 3964 என்ற மர்ம எண் தெரிய வருகிறது. இவ்வாண்டை (2010), அந்த 'மர்ம' எண்ணுடன் கழித்தால், இம்முறை யார் வெற்றி வாகை சூடுவார்கள் என்று தெரிந்துவிடும்.

3964 - 2010 = 1954... 1954-இல் உலகக் கிண்ணத்தை வென்றவர் வேறு யாருமில்லை, எனக்கு துளியும் பிடிக்காத ஜெர்மனி.


இன்று அதிகாலை நடந்த அரையிறுதி ஆட்டத்தில், உருகுவே அணி நெதெர்லாந்தைச் சந்தித்தது. அதில் நெதெர்லாந்து அணி மூன்றுக்கு இரண்டு என்ற கோல் கணக்கில் உருகுவேவைத் தோற்கடித்தது. இன்னும் ஓரிரு மணி நேரங்களில், ஜெர்மனி அணியும் ஸ்பேயின் அணியும் மற்றொறு அரையிறுதி சுற்றில் களமிறங்க உள்ளனர். நடக்கவிருக்கும் ஆட்டத்தில் ஜெயிக்கும் குழு நெதெர்லாந்துடன் இறுதிச் சுற்றில் மோத வேண்டும். இந்த ஆட்டத்தில் ஜெர்மனி ஸ்பேயினை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறி, நெதெர்லாந்தையும் தோற்கடித்து, மேலே கணித்தது போல உலகக் கோப்பையைக் கைப்பற்றுமா? இந்த சிறிய ஆராய்ச்சி போட்டிக்கு முன்பே உண்மையை வெளிப்படுதியதா என்று பொருத்திருந்து பார்ப்போம்.

பி.கு இப்படி ஆராய்ச்சி செய்யுமளவிற்கு உனக்கு இத்தனை அறிவா என்று வியக்க வேண்டாம். இது சத்தியமாக எனது ஆராய்ச்சியில்லை. இது போன்ற எண்ணங்கள் என் சிற்றறிவுக்கு எட்டாதவை. இந்த அளவுக்கு யோசிக்கும் திறமை இருந்திருந்தால், நான் சந்திர மண்டலத்திலேயே பிறந்திருப்பேன். இது என் நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் அனுப்பி வைத்தார். படிக்கும் போது, முன்பே குறிப்பிட்டது போல நண்பர் ராஜாவின் பதிவு தான் ஞாபகம் வந்தது. உடனே அதனை மொழிப் பெயர்த்து இங்கே பகிர்கிறேன், அவ்வளவே.:)

Tuesday, April 27, 2010

நடந்ததெல்லாம் நன்மைக்கே...

இன்றைய நாள் எனக்கு சரியாக போகவில்லை. காலையில் எழுந்தவுடன் கண்ணாடியைப் பார்த்து விட்டேனோ என்று ஞாபகப் படுத்த முயல்கிறேன். முடியவில்லை.

காட்சி 1:


காலையிலிருந்து முகம் தெரியாத நபரிடம் இருந்து குறுஞ்செய்திகள் வந்த வண்ணமாகவே இருகின்றது. அவள் என்னை காதல் செய்கிறாளாம். இதில் என்ன வேடிக்கை என்றால் என்னை அவளுக்கு மிக நன்றாக தெரியும் என சொல்கிறாள். அதே சமயம், எனக்கும் அவளை நன்றாகத் தெரியும் என்கிறாள். சொன்னா நம்புங்க, எனக்கு பெண் நண்பர்கள் மிகக் குறைவு. சிறு வயதிலிருந்தே என் வகுப்பறையில் சேர்ந்து படித்த மாணவிகளுடன் கூட பேச மாட்டேன். மின்னலே 'மேடி' சொல்வது போல 'எனக்கு இந்த பொண்ணுகனாளே ஒரே அலர்ஜி. அவங்களுக்காக டைம் வேஸ்ட் பண்றது மணி வேஸ்ட் பண்றது எல்லாம் பிடிக்காது', நான் இந்த ரகம். அது மட்டும் இல்லாமல் my kind of girl-ஐ நான் இன்னும் பார்க்கவில்லை.

இந்த சதிகாரி என் பெயர், நான் வசிக்குமிடம் அத்தனையும் சரியாக சொல்கிறாள். நான் பல முறை கேட்டுப் பார்த்தும் அவளது அடையாளத்தை வெளிபடுத்த மறுத்தாள். உண்மையிலேயே, இதனால் எனக்கு இன்று வேலையே ஓடவில்லை (மனசாட்சி: இல்லைனாலும்). என்னையும் ஒரு பெண் விரும்புகிறாள் என்று நினைக்கையில் 'காலரைத்' தூக்கி பெருமிதம் கொள்கின்றேன். அதே வேளையில், இது உண்மை எனும் பட்சத்தில் இப்படியும் ஒரு பேண்ணா என கவலையாக உள்ளது. இன்னும் சொல்லப் போனால் அருவருப்பாக உள்ளது. காரணம், நீங்கள் அவளது குறுஞ்செய்திகளை வாசித்திருக்க வேண்டும். கௌதம் மேனன் படம் அதிகம் பார்ப்பாள் போலும். இதோ உங்களுக்காக சில:

  • Hello darling, Miss you so much dear. i wish u are with me now so that I can kis you deep.

  • Ok la. I want to be frank with you. I want you to be my boyfriend. Can or not?

  • I want to have a romantic dinner with you and make love to you.

  • Yes, Yoga darling. I know you and love you very much.

  • You light up my life, you give me hope.


  • நான் எவ்வளவோ கெஞ்சி கடைசியில் ஒரு வழியாய் அவள் பெயரை மட்டும் சொன்னாள், ராஜ் என. இது ஆண் பெயரல்லவா.

    ஒரு வேளை இது ஒரு ஆணாக இருந்து, நான் ஒரு பெண் என எண்ணி இந்த கவலைக்கிடிமான சூழ்நிலைக்கு தள்ளப்படேனோ...
    ஒரு வேளை நிஜமாலுமே எனக்கு இப்படி ஒரு 'secret admirer' இருப்பாளோ...
    ஒரு வேளை எனது நண்பர்களில் யாரோ ஒருவர் இப்படி என்னிடம் விளையாடுகிறார்களோ...
    ஒரு வேளை நான் 'gay' என்று இவன் நினைத்திருப்பானோ...

    இப்படி பல 'ஒரு வேளைகள்'...

    காட்சி 2:


    அடுத்து, முகப்புத்தகத்தில் (Facebook) ஒருவரிடம் வாக்குவாதம் ஏற்பட்டது. சின்ன விசயம் தான். அவர் ஒரு சூர்யா ரசிகன். வழக்கம் போல சூர்யாவின் வீடியோ ஒன்றைப் பற்றிய விவாதம் ஏற்பட, அதற்கு நான் அண்ணன் காவுண்டமணியின் பாணியில் ஒரு கருத்து சொன்னேன். அதற்கு அந்த நபர் தான் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் உளறினார். ஆதலால், அவருக்கு பதில் கூறாமல் நான் புறக்கணித்தேன். என்ன நினைத்தார் என தெரியவில்லை. தனி மடலில் (chat) நான் ஏன் அவருக்கு பதில் சொல்லவில்லை என கேள்வி எழுப்பினார். அவருக்கு கட்டாயம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என வற்புருத்தினார்; எச்சரிக்கைக் கூட செய்தார். நேரம் ஆக ஆக அவரது பேச்சு அனாவசியமாகத் தெரிந்தது. அந்த விசயத்திலிருந்து வெளிவந்து தனிப்பட்ட முறையில் என்னைத் தாக்கினார் (personal attack). நம் பொருமைக்கும் ஒரு எல்லை இருக்கும் அல்லவா. கடும் சினம் எனக்கு. அவருடன் மேற்கொண்டு பேசாமல் அவரது ஃப்ரோபைளை துண்டித்தேன் (disconected his profile).

    மீண்டும் அவர் எனக்கு நண்பராக அழைப்பிதழ் விடுத்தார். சற்று கோவம் தெளிந்த நான் அதனை எற்றுக் கொண்டேன். தன் செயலை எண்ணி பல முறை மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். தொலைப்பேசி எண்களைக் கூட பரிமாறிக் கொண்டோம். மன்னிப்பு கேட்குறவன் பெரிய மனுசன், மன்னிகிறவன் அதை விட பெரிய மனுசன் என விருமாண்டி கமல் சொன்னது போல நான் பெரிய மனுசனாகி அவரை மன்னித்து விட்டேன்.

    காட்சி 3:


    நளை அதிகாலை எனக்கு பிடித்த Barcelona அணி Inter Milan அணியை அரை இறுதி இரண்டாம் சுற்றில் சந்திக்கவிருக்கிறது. முதல் சுற்றில் Inter Milan மூன்றுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் வென்றது. எனவே, நாளை விடியற்காலை நடக்கவிருக்கும் போட்டுயில் இரண்டுக்கு சூழியம் என்ற கோல் கணக்கில் Inter Milan-ஐ தோற்கடித்தால் இறுதிச் சுற்றுக்கு எனது அணி தகுதி பெறும். அது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. எது எப்படியோ, இந்த போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என நம்புகின்றேன். காலையிலிருந்து இதை நினைத்துக் கொள்ளுகையில் ஒரு அச்சம் மனதில் இருந்து தொலைக்கிறது. இதில் Barcelona அணி கண்டிப்பாக ஜெயித்து இறுதி சுற்றிலும் வெற்றி வாகை சூடி, தனது கடந்த ஆண்டின் வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள இறைவணை வேண்டுகிறேன். எனக்காக நீங்களும் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.


    ஒரே நாளில் எத்தனை எண்ணங்கள், சங்கடங்கள் மற்றும் புது புது அனுபவங்கள். நம்மைச் சுற்றி நடக்கும் எல்லா விசயங்களும் நன்மைகே என எண்ணி, அதில் நல்லதைப் பிழிந்து கெட்டதை அகற்றுவோமானால் சீருடன் வாழலாம். சில மாதங்கள் கழித்து, இதனை மீண்டும் படிக்கையில் கண்டிப்பாக சிரித்துக் கொள்வேன் என்பது உறுதி.

    பி.கு நான் எழுதி சில நட்கள் ஆகிற்று. அதான் இந்த மொக்கை பதிவின் காரணம்.

    Tuesday, April 13, 2010

    மற்றுமொரு ஆண்டு இனிதே துவங்குகிறது...

    என் இனிய தமிழர்களே...
    நான் சம்பாதித்த அன்பான ஃபோளோவர்களே...

    எனது பதிவுகளுக்கு தமிலிஷில் வாக்களிக்கும் துறவிகளே...
    தொடர்ந்து ஆதரவை அள்ளித் தெளிக்கும் நல்ல உள்ளங்களே...

    எல்லா பதிவுகளையும் படித்து மனம் நொந்து போகும் ஜீவன்களே...
    ஒவ்வொரு பதிவிற்கும் மறவாமல் காமேண்ட் போடும் வாசகர்களே...

    மொக்கையாக இருந்தாலும் நல்ல பதிவு என வாழ்த்தும் மகான்களே...
    பதிவுகளை படித்துவிட்டு காமெண்ட் போடாமல் எஸ்கேப் ஆபவர்களே...

    மற்றும் எனது நலம் விரும்பிகளே, நண்பர்களே, எதிரிகளே, துரோகிகளே, குழந்தைகளே, சிறுவர்களே, முதியோர்களே, தாய்மார்களே, இளஞ் சிட்டுகளே, ஆண் சிங்கங்களே, மாணவ மணிகளே...


    உங்கள் அனைவருக்கும் என் இனிய மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். எதிர்வரும் ஆண்டு நம் எல்லோருக்கும் சிறப்பான வெற்றிகரமான செழிப்பான வண்ணங்கள் நிறைந்த ஆண்டாக அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கின்றேன்.

    எதிர்வரும் ஆண்டை இருகரம் நீட்டி வரவேற்போமாக. அடுத்த வருடம் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்.

    நன்றி வணக்கம்.

    __/\__ இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க __/\__

    "தமிழன் என்று சொல்லடா 'தல' நிமிர்ந்து நில்லடா..."

    என்றென்றும் உங்கள் நல்லாசியை நாடும்,
    நா.யோகநாதன் AKA தலபேன்ஸ் :)

    Wednesday, March 24, 2010

    இவர்களையெல்லாம் ஓங்கி அரைய வேண்டும்

    அன்றாட வாழ்க்கையில் எண்ணிலடங்கா மனிதர்களையும் சூழ்நிலைகளையும் பிரச்சனைகளையும் சந்தித்து வருகிறோம். எதாவது ஒரு விதத்தில் நம் ஆதங்கத்திற்கு ஆளாபவர்களை 'பளார்' என்று ஒங்கி அரைய வேண்டும் போல இருக்கும். சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு நம்மால் ஒன்றும் செய்ய இயலாமல் போய்விடும். உள்ளுக்குள்ளே குமுற வேண்டியிருக்கும். 'நம்மால் என்ன செய்ய முடியும்' என்ற கொள்கையிலேயே வாழ்ந்து வருகிறோம். நான் இப்படி பல சந்தர்ப்பங்களை அனுபவித்துள்ளேன்; இன்னும் எதிர் கொண்டு தான் வருகிறேன். அதனைப் பரிமாறிக் கொள்ளவே இந்த இடுகை.

    1. திடீர் ஆங்கில மேதாவிகள்

    உடன் படித்த நண்பனைச் சந்திக்கிறோம் (சில/பல ஆண்டுகளுக்குப் பிறகு). இத்தனைக்கும், இருவரும் தமிழ் தெரிந்தவர்கள், படித்தவர்கள். நாம் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் (தமிழில்), ஆங்கிலத்தில் பதில் வரும். என்னமோ 'யூ.கே'யில் பிறந்து, 'கேம்ப்ரிட்ச்' பல்கலைகழகத்தில் பட்டம் பெற்ற மாதிரி அளட்டிக் கொள்வார்கள். தமிழ் பேசுவது கௌரவக் குறைச்சல் என்றும் ஆங்கிலம் பேசுவதனால் தாங்கள் உயர்ந்த நிலையில் இருப்பதாகவும் இந்த அறிவுஜீவிகள் நினைத்துக் கொள்கிறார்கள். அந்த மாதிரி நண்பர்களை ஓங்கி அரைந்து விடலாம் போலிருக்கும்.

    2. தியேட்டர் கவுண்டரில் நேரத்தை வீணடிப்பவர்கள்

    ஜோடியாக வந்திருப்பார்கள். 'கவுண்டரின்' முன்னின்று கொஞ்சிப் பேசி படத் தேர்வு, உட்காருமிடத் தேர்வு எல்லாம் முடிந்து, அதற்கப்புறம் பணத்தை சட்டைப் பைக்குள் தேடியெடுப்பார்கள். அதற்கு யார் பணம் கொடுப்பது என 'செல்ல' சண்டைகள் எல்லாம் ந்டக்கும். பலர் இப்படி கவுண்டரில் செய்வதனால், சிலர் படம் பார்க்க முடியாமலே போய் விடுகிறது. முன்னதாகவே, என்ன படம், போதுமான பணம் என எல்லாத் தேவைகளையும் தயார் செய்து வைப்பார்களேயானால் இதற்கு ஒரு தீர்வு காண முடியும். இந்த கூட்டத்தையும் ஓங்கி அரைய என் மனம் துடிக்கும்.

    3. திரையரங்கினுள்ளே

    பொதுவாக தியேட்டர்களினுள்ளே இரு பிரச்சனைகளை சந்தித்துள்ளேன். முதலாவதாக, படம் ஆரம்பித்து சில நிமிடங்களுக்குப் பிறகு அரங்கின் உள்ளே நுழைபவர்கள். ஆரவாரம் செய்து, இடத்தைத் தேடி பிடித்து உட்காருவதற்குள், நமக்கு படம் பார்க்கும் ஆசையே போய்விடும். அதுவும் திரையை மறைத்தவாரு நின்று கொண்டு 'டிக்கட்டை' பார்த்து இடம் தேடுவது நமக்கு எரிச்சலாக இருக்கும். படம் ஆரம்பிக்கும் சில நிமிடங்களுக்கு முன்னால் வந்தால், யாருக்கும் எந்த ஒரு பிரச்சனையும் வராது.
    இரண்டாவதாக, தீவிரமாக படம் பார்த்துக் கொண்டிருப்போம். திடீரென தொலைப்பேசி ஒலிக்கும். மிகவும் தொந்தரவாக இருக்கும். மனதில் கடிந்துக் கொண்டே படத்தைப் பார்ப்போம். இது நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. தியேட்டரினுள் கைபேசியின் ஒலியை அமுக்கி வைப்பது அனைவரும் அறிந்த ஒரு உலக பண்பாடு/நியதி. பலர் இதனை விளங்கிக் கொள்ளாதவரை இது நீடிக்கும். அதுவரை எனது அரை வாங்கும் பட்டியலில் இவர்கள் இடம் பெருவர்.

    4. பிச்சை கேட்டு வருபவர்கள் (உடல் ஊனம் இல்லை)


    உடல் ஊனம் எதுவும் இருக்காது. அசுத்தம், கந்தலான உடை, பல நாட்கள் கோரப்படாத தலை முடி என பிச்சைக்காரர்களுக்கு இருக்கும் எல்லா குணாதிசயங்களும் இவர்களிடம் தெரியும். பிச்சை எடுப்பார்கள். இவர்களில் சிலர் ஒரு படி மேல் சென்று, நாம் உதவ மறுத்தால் நமக்கே உபதேசம் செய்வார்கள், திட்ட கூட செய்வார்கள். 'தம்பி, எங்கள மாதிரி ஆளுங்களுக்கு காசு கொடுக்கனும், அப்போ தான் நல்லா இருப்ப' என சொல்பவர்களை எல்லாம் பார்த்திருக்கிறேன். இந்த மாதிரி சோம்பேறிளை கண்ணம் சிவக்குமளவு அரைந்து, 'போய் உழச்சி சாப்பிடு யா' என சொல்லத் தோன்றும்.

    5. எரிந்து விழும் பஸ் ஓட்டுனர்கள்

    இதை பலர் அனுபவத்திருப்போம். எல்லாருக்கும் 'டென்ஷன்' இருக்கும். ஆனால், இந்த பஸ் ஓட்டுனர்களின் போக்கு மிக கொடியது. தன் சொந்த பிரச்சனையில் உள்ள கோபத்தைப் பயணிகள் மீது காட்டுவது சரியல்ல. அதோடு நிருத்திக் கொள்ளாமல், பேருந்தை ஆபத்தான போக்கில் செலுத்துபவர்களும் உண்டு. வேகமாக ஓட்டுவார்கள்; திடீரென 'ப்ரேக்' போடுவார்கள்; சரியான 'ஸ்டாப்பில்' நிருத்த மாட்டார்கள். ஒவ்வொரு பயணிகளிடமிருந்தும் ஒரு அரைக்குப் பிறகு, இது போன்ற பஸ் ஓட்டுனர்களின் 'லைசன்சை' முதலில் பரிமுதல் செய்ய வேண்டும்.

    6. ஊனமுற்றோர் அல்லது முதியவர்களுக்கு முன்னுரிமை

    பேருந்து, விரைவு ரயில் போன்றவற்றில் பயணித்திருப்போம். ஊனமுற்றோர்களோ அல்லது வயதானவர்களோ தள்ளாடி நின்று கொண்டிருக்கையில், வாலிபர்கள் உட்கார்ந்து வருவது வேதனைக்குள்ளாக்கும் காட்சி. அதிலும், நின்று கொண்டிருக்கும் முதியோர்களையும் உடல் ஊனமுற்றவர்களையும் பார்த்தும் பார்க்காதவாறு முகத்தை திருப்பிக் கொண்டு வெட்கமே இல்லால் தனக்கென்ன என்று உட்கார்ந்து வரும் மக்களை என்ன செய்ய? கண்டிப்பாக அரையத் தான் வேண்டும்.

    7. உறக்க பேசும் ஆசாமிகள்


    பொதுவாகவே ஆசியர்கள் உறக்க பேசுபவர்கள் எனும் அபிப்பிராயம் ஐரோப்பியர்களிடம் பரவலாக இருந்து வருகிறது. நான் பார்த்த வரையில் இது உண்மை தான். பொது இடங்களில், குறிப்பாக பேருந்தில் உறக்க பேசுபவர்களை நாம் பார்த்திருக்கக் கூடும். அதுவும் கையில் தொலைப்பேசி ஒன்றிருந்தால், உலகத்தையே மறந்து விடுவார்கள். பிற பிரயாணிகளுக்கு அவதூறு உண்டு பண்ணும் வகையில் நடந்து கொள்ளும் இந்த மாதிரி ஆசாமிகள் கண்டிப்பாக அரை வாங்கத் தகுதியானவர்களே.

    8. தலையாட்டி பொம்மைகளாக நடத்தும் நண்பர்கள்

    சில நண்பர்களுக்கு நாம் அவர்களுடைய தலையாட்டி பொம்மைகளாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். உதாரணத்திற்கு, அவர்கள் எங்கு அழைத்தாலும், நாம் உடனே போக வேண்டும், மறுப்பு ஏதும் சொல்லக் கூடாது. ஏன், எங்கே, எதற்கு என்ற பேச்சிற்கே இடம் இருக்கக் கூடாது என அவர்கள் விரும்புவர். நமக்கென எந்தவொரு விருப்பு வெருப்பு ஏதும் இருக்கக் கூடாதா? இப்படிப் பட்டவர்கள் நண்பர்கள் அல்ல. ஒரே அரையில் உனக்கும் எனக்கும் இனி எந்த பொடலங்காய் நட்பும் கிடையாது என்று சொல்ல வேண்டும் போலிருக்கும்.

    9. அலட்சியமான அரசாங்க ஊழியர்கள்

    வரி, 'பென்ஷன்' என அரசாங்க கொடுத்தல் வாங்கலிடமிருந்து யாரும் தப்ப முடியாது. இது போன்ற விசயங்களில் அரசாங்க ஊழியர்களின் உதவி தேவைப்படுகிறது. ஆனால், அவர்களது அலட்சியப் போக்கினால் நமக்கு ஆக வேண்டிய வேலைகள் தள்ளிப் போகின்றன. தனக்கென்ன என்ற ஆனவமும், அரசாங்க ஊழியர்களை யாரும் ஒன்றும் செய்து விட முடியாதென்றும் இவர்களிடம் ஒரு எண்ணம் எப்போதும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. நாம் விடும் அரையில் இவர்களது கர்வம், ஆனவம், அகம்பாவம் எல்லாம் கரைந்து போய், தங்கள் பணிகளை ஒழுங்காக செய்ய வேண்டும்.

    10. தொலைக்காட்சியில் விருப்ப பாடல்


    இதைப் படித்தவுடன் நீங்கள் சிரிக்கலாம். ஆனால், எனக்கு இது ஒரு 'சீரியசான' விசயம், குறிப்பாக நான் அஜித் ரசிகன் என்பதனால். பல முறை பார்த்திருக்கிறேன். அஜித் ரசிகர்கள் அஜித் பாடல் வேண்டுமென கேட்டால், உடனே உரையாடல் துண்டிக்கப் பட்டுவிடும். இல்லையேல், நீங்கள் என்ன சொன்னீர்கள் என சரியாக விளங்கவில்லை என்று தொகுப்பாளர்கள் வாய்க் கூசாமல் பொய் சொல்லிவிட்டு, வேரு நடிகர்களின் பாடலை ஒளிபரப்புவார்கள். அந்த தொகுப்பாளர்களுக்கு அரை எல்லாம் பற்றாது. மாறாக, அவர்களை நிக்க வைத்து சுட வேண்டும் என்பதே எனது தீர்ப்பு...

    Thursday, March 19, 2009

    Tribute to All Mothers

    Theeyil Vizhuntha
    Nilalinai Nijamum
    Kaalayil Thinamum

    Ammanaa Summa Illa



    Note: Amma EndrazhaikkAtha