கனத்த மழை பொழிந்து ஓய்ந்திருந்தது. கதிரவன் மெல்ல தன் முகத்தைக் காட்டத் தொடங்கினான். மணியைப் பார்த்தேன். கடிகாரம் சிரித்துக் கொண்டிருந்தது. சரியான நேரம்தான். அம்மா செய்த பணியாரத்தை வாயில் கவ்வியவாறு காலணியை மாட்டினேன். வீட்டைவிட்டு வெளியேறி பேருந்து நிலையத்தை நோக்கி கால்கள் வேகமாக நடந்தன.
அதற்கு முன் என்னைப் பற்றி சொல்ல வேண்டும். என் பெயர் வினோத், வயது 22, ஒரு சராசரி குடும்பத்தில் பிறந்தவன்.
'கம்ப்யூட்டர் சைன்ஸ்' முடித்து இரு மாதங்களாக தீவிரமாக வேலைத் தேடி அலைந்துக் கொண்டிருக்கிறேன். ஏறி இறங்கிய கம்பேனிகள் பல, எண்ணிக்கை சரியாக நினைவில் இல்லை. அப்போது கூட ஒரு கம்பேனி 'இன்டர்வியூ'விற்கு தான் கிளம்பிக் கொண்டிருந்தேன். காம்பெஃ கம்பேனி. இதில் மட்டும் வேலை கிடைத்தால், ஒரு வழியாக வாழ்க்கையில் 'செட்டில்' தான் என்ற எண்ணம் மனமுழுவதும் இருந்தது. இண்டர்வியூ காலை மணி பதினொன்றுக்கு. கம்பேனி பக்கம் தான் என்ற ஒரு சின்ன அலட்சியம் தான் எனக்கு.
பத்து நிமிஷ காத்திருத்தலுக்குப் பிறகு பேருந்து வந்தது. சரியான கூட்டம். ஒரு வழியாக முண்டியடித்து ஏறினேன். அளவு கடந்த பயணிகள் எண்ணிக்கையை ஈடுகட்டியபடியே, பேருந்து மெதுவாக நகர்ந்தது. புழுக்கம் ஒரு பக்கம், கையில் வைத்திருந்த 'பஹயிலை' வீசியவாறு நின்றுக் கொண்டிருந்தேன். பேருந்து அடுத்த 'ஸ்டாப்பில்' நின்றது.
மிச்ச சொச்ச இடத்தையும் ஏறிய பயணிகள் நிரப்ப, "உள்ள போங்கப்பா, படிகட்டுல நிக்காதீங்க" என்று கண்டக்டர் தன் வழக்கமான புராணத்தை ஆரம்பித்தார். குழந்தை ஒன்றின் அழுகை, ஒரு கணவன் அவன் மனைவியுடன் சண்டைப் போடும் காட்சி, காலேஜ் மாணவர்களின் ஜாலியான வெட்டிப் பேச்சு என என்னைச் சுற்றி பல கூத்துகள், சத்தங்கள்.
எதையுமே காதில் வாங்காத படியே பஹயிலில் வைத்திருந்த சான்றிதழ்கள், 'ரெசுமே' மற்றும் இதர பத்திரங்கள் எல்லாம் சரியாக இருக்கின்றனவா என உறுதிப் படுத்திக் கொண்டிருந்தேன். அப்போது தான் அவளைப் பார்த்தேன். யார் பெற்ற பிள்ளையோ, அத்தனை அழகு. நல்ல நிறம், சுமாரான உயரம், அடர்த்தியான தலை மயிர். அவ்வளவு பெரிய கூட்டத்திலும் பளீர் எனத் தெரிந்தாள். பட்டென என் கண்கள் அவளை மேலிருந்து கீழ், இடமிருந்து வலம் என எல்லா கோணங்களிலும் 'ஸ்கேன்' பண்ணியது. என்ன ஆச்சிரியம், எனக்கு பிடித்த எல்லா அம்சங்களும் அவளிடம் அப்படியே பொருந்திருந்தன. கறுப்பு நிற பாவாடை தாவணி அணிந்திருந்தாள். கறுப்பும் எனது விருப்ப நிறம் தான்.
காலையில் சாமி கும்பிட்டதாலோ என்னவோ தெரியவில்லை, கடவுளின் தரிசனம் நிரம்பி வழிந்தது அன்று. அவளே வந்து என் பக்கத்தில் நின்றாள். பேருந்தின் வேகம் கூட, சற்று காற்றடிக்க, தாவணி லேசாக விலகியது. அவளது இடுப்பு ஓரளவு தெரிந்தது. கரிய நிற தாவணி தன் உடல் முழுவதும் பரவி இருக்க, நல்ல எலுமிச்சையும் தக்காளியும் கலந்த நிறத்தில் அவளது அந்த இடுப்பு பகுதி மட்டும் தெரிந்ததே, ஆஹா, என்ன சொல்வது, சித்தரிக்க வார்த்தைகள் தேட வேண்டும்.
"அங்க பார்க்காத, அப்படி எல்லாம் குருகுருனு லுக்கு விட்டா செருப்படி தான்டீ" என, என்ன தான் மனசாட்சி குமுறினாலும், கண்கள் கேட்பதாக தெரியவில்லை. ஓரக் கண்ணில் அவளையே பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன், நிறுத்த முடியவில்லை. யாராவது நான் பார்ப்பதைப் பார்த்து விடுவார்களோ என்ற பயம் ஒரு பக்கம் இருந்து கொண்டே இருந்தது. சுற்றும் முற்றும் அவ்வப்போது 'செக்' பண்ணியபடியே, என் கண்கள் அதன் கடமையைச் சரியாக செய்துக் கொண்டிருந்தன.
"சந்தன தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா" என்ற பாடல் கேட்டது. "அட, நம்ம தல பாட்டு", எனக்கே உரிய பாணியில் என் உதடுகள் விரிய சிரித்துக் கொண்டேன். கைப்பையிலிருந்து செல் போனை எடுத்தாள். "இவளது போன் தானா, நம்ம ஆளு பாட்டு ரிங்டோனா வச்சுருக்காளே... ஒரு வேளை அஜித் ரசிகையா இருக்குமோ", என்னையே கேட்டுக் கொண்டேன். "ரகுமான் ஃபேனா கூட இருக்கலாம்டா நாயே" என்று மீண்டும் மனசாட்சி 'மைக்' போட்டு உரக்கக் கத்தியது.
"ஹலோ" என்றாள். எனக்கு இருக்கும் நல்ல பழக்கங்களில் ஒன்று ஒட்டுக் கேட்பது. அவள் என்ன தான் பேசுகிறாள் என்று தெரிந்துக் கொள்ள ஒரு அடி இன்னும் அவள் பக்கம் நெருங்கி கவனம் செலுத்தினேன். அதோடு அவள் குரலையும் அப்படியே கேட்டுவிடலாமே. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.
"அஞ்சு, நீ அங்கேயே வெயிட் பண்ணு. இதோ இன்னும் பத்து நிமிஷத்துல அங்க இருப்பேன்" என்றாள்.
"ஆஹா, என்ன குரல். சுசிலா மேடம் தோத்தாங்கய்யா" என்று நானே எனக்குள் முனுமுனுத்தேன். யார் இவள்? இதற்கு முன் எங்கேயும் பார்த்ததில்லை. இவளது முகவரியை எப்படியாவது இன்று கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்ற ஒரு திடீர் ஆசை பெருக்கெடுத்தது. அம்மாவிடம் சொல்லி இவளை எப்படியாவது பெண் கேட்க சொல்லலாம் என்ற உத்தேசம் பிறக்குமளவுக்கு அவளது அழகு என்னைக் கட்டிப் போட்டது. சிறிது நேரம் கழித்து பேருந்தை விட்டு இறங்கினாள். மந்திரித்து விட்டாற் போல எங்கே எதுற்காக என்று எதுவுமே அறியாமல் நானும் இறங்கினேன், எனக்கு வேண்டியதெல்லாம் அவளது 'அட்ரெஸ்'. அவளது தோழி அவளுக்காக காத்துக் கொண்டிருந்தாள். இருவரும் எதோ பேசினார்கள்.
நான் எதிரே உள்ள நாயர் கடையில் 'டீ' சொல்லிவிட்டு, சற்று மறைவிலிருந்து அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவளை மட்டுமே கவனித்தேன் என்று தான் சொல்ல வேண்டும். தூரத்திலிருந்து பார்க்கவும் அழகாக இருந்தாள், கோவா படத்தில் வரும் மெலனி மாதிரி. "ஸி இஸ் தெ ஒன், இவ்வளவு காலம் எங்கிருந்தாள்" என நானே என்னைக் கேட்டுக் கொண்ட நேரம் அது. எனக்கு அப்படியே "உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே, என் நினைவு தெரிந்து நான் இது போல இல்லையே" என்று பரத்வாஜ் இசையமைக்க, எஸ்.பி.பி பாட, தல அஜித் ஆடியது போல எழுந்து ஒரு சின்ன ஆட்டமாவது போட வேண்டும் போல இருந்தது.
சில நிமிடங்கள் கடந்திருக்கும். தன் தோழியுடன் விடைப் பெற்று 'ஆட்டோ' ஒன்றை நிறுத்தி பட்டென ஏறினாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்த கண்கள் அவள் போவதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்தன, எதையோ இழப்பது போல மனம் இறுக்கமானது. நாயர் டீயை கொண்டு வந்து முன் நீட்டினார். எதிர்திசையில் போய்க் கொண்டிருக்கும் ஆட்டோவை பார்த்தபடியே 'கிலாஷை' பிடிக்கத் தவறி, டீ கீழே வைத்திருந்த என் பஹயில் மீது விழ, காப்பி பஹயிலின் முகப்பை நனைத்தது. பஹயிலை எடுத்து உதறினேன். "வெயிட் அ மினிட். பஹயில்... பஹயில்... இண்டர்வியூ... ஓ காட்" நெஞ்சு படபடத்தது. "இப்போ தான் ஞாபகம் வந்ததா" என்று குறுக்கிட்ட மனசாட்சியின் குரலை துளியும் பொருட்படுத்தாமல், கண்கள் கடிகாரத்தைப் பார்த்தன. சரியாக மணி பதினொன்றரை.
நான் போக வேண்டிய கம்பேனி இருக்கும் இடத்தை எல்லாம் கடந்து விட்டதாக அப்போது தான் உணர்ந்தேன். எனக்கு நானே ஆறுதல் கூறியவாரு, காம்பேஃ கம்பேனியை நோக்கிப் புறப்பட்டேன். சுமார் பனிரெண்டு மணிக்கு அந்த கம்பேனியை சேர்ந்தடைந்தேன். இண்டர்வியூ அதிகாரியைச் சந்தித்தேன். தாமதமாக வந்ததால், நம்பும் படியாக எதோ ஒரு பொய்யை அவரிடம் அவிழ்த்து விட்டேன். பொய் சொல்லுதல், அதுவும் நம்பும் படியாக ஒப்பிப்பது எனக்கு அத்துபடி, எனது நல்ல பழக்கங்களில் இதுவும் அடங்கும். அவர், 'சாரி வினோத், யூ ஆர் லேட். வி ஹேட் ஒன்லி ஒன் பொசிஷன் அண்ட் வி ஹெவ் செலெக்டட் சம்ஒன் எல்ஸ்' என்று முகத்தை வருத்தமாக வைத்தபடியாக சொன்னார்.
எனக்கு இடி விழுந்தாற் போல இருந்தது. கண்கள் கலங்கியது உண்மை. கம்பேனி வாசலை மறைத்து, வெளி புறம் பார்த்தவாறு கைகளைப் பிசைந்து நின்றுக் கொண்டிருந்தேன். அவ்விடத்தை விட்டு போக மனம் வராமல், என்ன செய்யவதென்று தெரியாமல் திகைத்த அந்த நொடிகளை மறக்கப் போவதில்லை. "நல்ல சந்தர்ப்பத்தை வீணடித்து விட்டேனே", "அம்மா என்ன சொல்லப் போகிறாரோ", "அப்பாவுக்கு தெரிந்தால் செருப்படி விழுமோ" என்று ஏகப்பட்ட கேள்விகள் அப்போது என்னைச் சுற்றி உலா வந்தன.
'எக்ஸ்கியூஸ்மீ... கொஞ்சம் வழி விடுங்கோ', திடீரென ஒரு குரல், பெண்ணுடையது. சில வினாடிகளுக்குப் பிறகு 'ஐ எம் சாரி' என்று சொல்லி வாசலிலிருந்து விலக முற்படும்போது, இந்த குரலை எங்கேயோ கேட்டுள்ளோமே என்று திரும்பிப் பார்த்தேன். பேருந்தில் பார்த்த அதே பெண். அப்பேற்பட்ட சோகத்திலும் ஒரு இன்ப அதிர்ச்சி. மீண்டும் அவளைச் சந்திப்பேனா என்று கனவா கண்டேன்? நேருக்கு நேராக அவள் முகத்தை ஒரு முறை உற்றுப் பார்த்தேன். யாருடனோ போன் பேசியவாறு இருந்தாள். இங்கு என்ன செய்கிறாள் என்ற கேள்வி என்னுள் உதயமாகி அடங்குவதற்குள், "டேடி, ஐ கோட் தெ ஜாப்" என்று சொல்லிக் கொண்டே என்னைக் கடந்து வெளியே சென்றாள்...
Friday, March 12, 2010
Subscribe to:
Post Comments
(
Atom
)
Boss, Nice write up....You have the writing skills....Keep improving....
ReplyDeletePonnai pathi enna mathiri oru varnanai(Especially iduppu varnanai)....Kavighargal thothanga ponga....
நல்ல கதை நண்பா ... பல வேலைகளை இப்படியே இழந்துருப்பீங்க போல..
ReplyDeleteThala, nalla irunthichu kathai! Keep it up...
ReplyDelete//"இவளது போன் தானா, நம்ம ஆளு பாட்டு ரிங்டோனா வச்சுருக்காளே... ஒரு வேளை அஜித் ரசிகையா இருக்குமோ", என்னையே கேட்டுக் கொண்டேன். "ரகுமான் ஃபேனா கூட இருக்கலாம்டா நாயே" என்று மீண்டும் மனசாட்சி 'மைக்' போட்டு உரக்கக் கத்தியது//
Super sir! Nenaichen, oru ponnu patti thaan ezhuthuveenga'nu! ;)
@Vasanth
ReplyDeleteThanks for the support bro :) EthO ezuthinEn, athukkunu Kavingargal rangeku enna osatthitEnggaLE... Hehe
@"ராஜா"
நண்பரே, இது வெரும் கற்ப்பனையே... நான் ரொம்ப நல்லவன், சொன்னா நம்புங்க... வருகைக்கு நன்றி. :)
@Kumar
Thanks Kumar. Nambala mAthiri ALungga vEra etha paththi ezuthuvAngga... Hehe