அன்றாட வாழ்க்கையில் எண்ணிலடங்கா மனிதர்களையும் சூழ்நிலைகளையும் பிரச்சனைகளையும் சந்தித்து வருகிறோம். எதாவது ஒரு விதத்தில் நம் ஆதங்கத்திற்கு ஆளாபவர்களை 'பளார்' என்று ஒங்கி அரைய வேண்டும் போல இருக்கும். சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு நம்மால் ஒன்றும் செய்ய இயலாமல் போய்விடும். உள்ளுக்குள்ளே குமுற வேண்டியிருக்கும். 'நம்மால் என்ன செய்ய முடியும்' என்ற கொள்கையிலேயே வாழ்ந்து வருகிறோம். நான் இப்படி பல சந்தர்ப்பங்களை அனுபவித்துள்ளேன்; இன்னும் எதிர் கொண்டு தான் வருகிறேன். அதனைப் பரிமாறிக் கொள்ளவே இந்த இடுகை.
1. திடீர் ஆங்கில மேதாவிகள்
உடன் படித்த நண்பனைச் சந்திக்கிறோம் (சில/பல ஆண்டுகளுக்குப் பிறகு). இத்தனைக்கும், இருவரும் தமிழ் தெரிந்தவர்கள், படித்தவர்கள். நாம் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் (தமிழில்), ஆங்கிலத்தில் பதில் வரும். என்னமோ 'யூ.கே'யில் பிறந்து, 'கேம்ப்ரிட்ச்' பல்கலைகழகத்தில் பட்டம் பெற்ற மாதிரி அளட்டிக் கொள்வார்கள். தமிழ் பேசுவது கௌரவக் குறைச்சல் என்றும் ஆங்கிலம் பேசுவதனால் தாங்கள் உயர்ந்த நிலையில் இருப்பதாகவும் இந்த அறிவுஜீவிகள் நினைத்துக் கொள்கிறார்கள். அந்த மாதிரி நண்பர்களை ஓங்கி அரைந்து விடலாம் போலிருக்கும்.
2. தியேட்டர் கவுண்டரில் நேரத்தை வீணடிப்பவர்கள்
ஜோடியாக வந்திருப்பார்கள். 'கவுண்டரின்' முன்னின்று கொஞ்சிப் பேசி படத் தேர்வு, உட்காருமிடத் தேர்வு எல்லாம் முடிந்து, அதற்கப்புறம் பணத்தை சட்டைப் பைக்குள் தேடியெடுப்பார்கள். அதற்கு யார் பணம் கொடுப்பது என 'செல்ல' சண்டைகள் எல்லாம் ந்டக்கும். பலர் இப்படி கவுண்டரில் செய்வதனால், சிலர் படம் பார்க்க முடியாமலே போய் விடுகிறது. முன்னதாகவே, என்ன படம், போதுமான பணம் என எல்லாத் தேவைகளையும் தயார் செய்து வைப்பார்களேயானால் இதற்கு ஒரு தீர்வு காண முடியும். இந்த கூட்டத்தையும் ஓங்கி அரைய என் மனம் துடிக்கும்.
3. திரையரங்கினுள்ளே
பொதுவாக தியேட்டர்களினுள்ளே இரு பிரச்சனைகளை சந்தித்துள்ளேன். முதலாவதாக, படம் ஆரம்பித்து சில நிமிடங்களுக்குப் பிறகு அரங்கின் உள்ளே நுழைபவர்கள். ஆரவாரம் செய்து, இடத்தைத் தேடி பிடித்து உட்காருவதற்குள், நமக்கு படம் பார்க்கும் ஆசையே போய்விடும். அதுவும் திரையை மறைத்தவாரு நின்று கொண்டு 'டிக்கட்டை' பார்த்து இடம் தேடுவது நமக்கு எரிச்சலாக இருக்கும். படம் ஆரம்பிக்கும் சில நிமிடங்களுக்கு முன்னால் வந்தால், யாருக்கும் எந்த ஒரு பிரச்சனையும் வராது.
இரண்டாவதாக, தீவிரமாக படம் பார்த்துக் கொண்டிருப்போம். திடீரென தொலைப்பேசி ஒலிக்கும். மிகவும் தொந்தரவாக இருக்கும். மனதில் கடிந்துக் கொண்டே படத்தைப் பார்ப்போம். இது நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. தியேட்டரினுள் கைபேசியின் ஒலியை அமுக்கி வைப்பது அனைவரும் அறிந்த ஒரு உலக பண்பாடு/நியதி. பலர் இதனை விளங்கிக் கொள்ளாதவரை இது நீடிக்கும். அதுவரை எனது அரை வாங்கும் பட்டியலில் இவர்கள் இடம் பெருவர்.
4. பிச்சை கேட்டு வருபவர்கள் (உடல் ஊனம் இல்லை)
உடல் ஊனம் எதுவும் இருக்காது. அசுத்தம், கந்தலான உடை, பல நாட்கள் கோரப்படாத தலை முடி என பிச்சைக்காரர்களுக்கு இருக்கும் எல்லா குணாதிசயங்களும் இவர்களிடம் தெரியும். பிச்சை எடுப்பார்கள். இவர்களில் சிலர் ஒரு படி மேல் சென்று, நாம் உதவ மறுத்தால் நமக்கே உபதேசம் செய்வார்கள், திட்ட கூட செய்வார்கள். 'தம்பி, எங்கள மாதிரி ஆளுங்களுக்கு காசு கொடுக்கனும், அப்போ தான் நல்லா இருப்ப' என சொல்பவர்களை எல்லாம் பார்த்திருக்கிறேன். இந்த மாதிரி சோம்பேறிளை கண்ணம் சிவக்குமளவு அரைந்து, 'போய் உழச்சி சாப்பிடு யா' என சொல்லத் தோன்றும்.
5. எரிந்து விழும் பஸ் ஓட்டுனர்கள்
இதை பலர் அனுபவத்திருப்போம். எல்லாருக்கும் 'டென்ஷன்' இருக்கும். ஆனால், இந்த பஸ் ஓட்டுனர்களின் போக்கு மிக கொடியது. தன் சொந்த பிரச்சனையில் உள்ள கோபத்தைப் பயணிகள் மீது காட்டுவது சரியல்ல. அதோடு நிருத்திக் கொள்ளாமல், பேருந்தை ஆபத்தான போக்கில் செலுத்துபவர்களும் உண்டு. வேகமாக ஓட்டுவார்கள்; திடீரென 'ப்ரேக்' போடுவார்கள்; சரியான 'ஸ்டாப்பில்' நிருத்த மாட்டார்கள். ஒவ்வொரு பயணிகளிடமிருந்தும் ஒரு அரைக்குப் பிறகு, இது போன்ற பஸ் ஓட்டுனர்களின் 'லைசன்சை' முதலில் பரிமுதல் செய்ய வேண்டும்.
6. ஊனமுற்றோர் அல்லது முதியவர்களுக்கு முன்னுரிமை
பேருந்து, விரைவு ரயில் போன்றவற்றில் பயணித்திருப்போம். ஊனமுற்றோர்களோ அல்லது வயதானவர்களோ தள்ளாடி நின்று கொண்டிருக்கையில், வாலிபர்கள் உட்கார்ந்து வருவது வேதனைக்குள்ளாக்கும் காட்சி. அதிலும், நின்று கொண்டிருக்கும் முதியோர்களையும் உடல் ஊனமுற்றவர்களையும் பார்த்தும் பார்க்காதவாறு முகத்தை திருப்பிக் கொண்டு வெட்கமே இல்லால் தனக்கென்ன என்று உட்கார்ந்து வரும் மக்களை என்ன செய்ய? கண்டிப்பாக அரையத் தான் வேண்டும்.
7. உறக்க பேசும் ஆசாமிகள்
பொதுவாகவே ஆசியர்கள் உறக்க பேசுபவர்கள் எனும் அபிப்பிராயம் ஐரோப்பியர்களிடம் பரவலாக இருந்து வருகிறது. நான் பார்த்த வரையில் இது உண்மை தான். பொது இடங்களில், குறிப்பாக பேருந்தில் உறக்க பேசுபவர்களை நாம் பார்த்திருக்கக் கூடும். அதுவும் கையில் தொலைப்பேசி ஒன்றிருந்தால், உலகத்தையே மறந்து விடுவார்கள். பிற பிரயாணிகளுக்கு அவதூறு உண்டு பண்ணும் வகையில் நடந்து கொள்ளும் இந்த மாதிரி ஆசாமிகள் கண்டிப்பாக அரை வாங்கத் தகுதியானவர்களே.
8. தலையாட்டி பொம்மைகளாக நடத்தும் நண்பர்கள்
சில நண்பர்களுக்கு நாம் அவர்களுடைய தலையாட்டி பொம்மைகளாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். உதாரணத்திற்கு, அவர்கள் எங்கு அழைத்தாலும், நாம் உடனே போக வேண்டும், மறுப்பு ஏதும் சொல்லக் கூடாது. ஏன், எங்கே, எதற்கு என்ற பேச்சிற்கே இடம் இருக்கக் கூடாது என அவர்கள் விரும்புவர். நமக்கென எந்தவொரு விருப்பு வெருப்பு ஏதும் இருக்கக் கூடாதா? இப்படிப் பட்டவர்கள் நண்பர்கள் அல்ல. ஒரே அரையில் உனக்கும் எனக்கும் இனி எந்த பொடலங்காய் நட்பும் கிடையாது என்று சொல்ல வேண்டும் போலிருக்கும்.
9. அலட்சியமான அரசாங்க ஊழியர்கள்
வரி, 'பென்ஷன்' என அரசாங்க கொடுத்தல் வாங்கலிடமிருந்து யாரும் தப்ப முடியாது. இது போன்ற விசயங்களில் அரசாங்க ஊழியர்களின் உதவி தேவைப்படுகிறது. ஆனால், அவர்களது அலட்சியப் போக்கினால் நமக்கு ஆக வேண்டிய வேலைகள் தள்ளிப் போகின்றன. தனக்கென்ன என்ற ஆனவமும், அரசாங்க ஊழியர்களை யாரும் ஒன்றும் செய்து விட முடியாதென்றும் இவர்களிடம் ஒரு எண்ணம் எப்போதும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. நாம் விடும் அரையில் இவர்களது கர்வம், ஆனவம், அகம்பாவம் எல்லாம் கரைந்து போய், தங்கள் பணிகளை ஒழுங்காக செய்ய வேண்டும்.
10. தொலைக்காட்சியில் விருப்ப பாடல்
இதைப் படித்தவுடன் நீங்கள் சிரிக்கலாம். ஆனால், எனக்கு இது ஒரு 'சீரியசான' விசயம், குறிப்பாக நான் அஜித் ரசிகன் என்பதனால். பல முறை பார்த்திருக்கிறேன். அஜித் ரசிகர்கள் அஜித் பாடல் வேண்டுமென கேட்டால், உடனே உரையாடல் துண்டிக்கப் பட்டுவிடும். இல்லையேல், நீங்கள் என்ன சொன்னீர்கள் என சரியாக விளங்கவில்லை என்று தொகுப்பாளர்கள் வாய்க் கூசாமல் பொய் சொல்லிவிட்டு, வேரு நடிகர்களின் பாடலை ஒளிபரப்புவார்கள். அந்த தொகுப்பாளர்களுக்கு அரை எல்லாம் பற்றாது. மாறாக, அவர்களை நிக்க வைத்து சுட வேண்டும் என்பதே எனது தீர்ப்பு...