Friday, December 31, 2010

பாட்டு கேட்கவா - தொடர் பதிவு

ஆரம்ப காலம் முதலே, என்னைத் தொடர்ந்து ஊக்குவித்து வரும் சக தோழர் ராஜா அவர்களின் அழைப்பை விடுத்தே இந்த தொடர் பதிவு. இதுவரை என்னை யாரும் தொடர்பதிவிற்கு அழைத்ததில்லை. என்னையும் ஒரு பதிவராக ஏற்று அழைத்தமைக்கு ராஜா அவர்களுக்கு நன்றிகள் பல.
என்னைக் கவர்ந்த, நான் எப்போதும் முனுமுனுக்கும் பெண்கள் குரலில் வெளிவந்த பாடல்கள் பல. பட்டியலை மேலும் சுருக்கி அவற்றுள் பத்தை மட்டும் எல்லோரையும் போல தொகுப்பாக வழங்குகின்றேன். இந்த பத்து பாடல்களும் இதற பாடல்களிலிருந்து தணித்து நின்றதால் பட்டியலை சுருக்கும்போது எந்தவொறு கஷ்டமும் எனக்கு ஏற்படவில்லை. இதோ உங்களுக்காக...

1. பார்த்த ஞாபகம் இல்லையோ (sad version)

படம்: புதிய பறவை (1964)
இசை: எம்.எஸ் விஸ்வநாதன்-ராமமூர்த்தி
வரிகள்: கண்ணதாசன்
பாடியவர்: பி. சுசிலா

இதில் இரண்டு வகைகள் (version) உள்ளன. எனக்கு மிகவும் பிடித்தது சோக பிண்ணணி பாடல். 'பியானோவில்' (piano) ஆரம்பமாகி 'அ...ஆஆஆ' என்று பாட ஆரம்பிப்பார், அங்கேயே நான் அடிமை. என்னைப் பொருத்தமட்டிலும், இந்த பாடலை வீழ்த்த எந்த பாடலும் வந்ததில்லை, இனி வர போவதும் இல்லை. பி.சுசிலா அவர்களின் குரலில் வெளிவந்த என்னற்ற பாடல்களில், இப்பாடல் கண்டிப்பாக ஒரு மணிமகுடம். தமிழ் தெலுங்கு சினிமா இரண்டிலுமே கடந்த 40 ஆண்டுகளாக இவரது ஆட்சி தான்.

2. சினேகிதனே

படம்: அலைபாயுதே (2000)
இசை: ஏ.ஆர்.ரகுமான்
வரிகள்: வைரமுத்து
பாடியவர்: சாதனா சர்கம்

அனைத்து பட்டி தொட்டிகளிலும் பட்டையைக் கிளப்பிய ஒரு பாடல். சில இடங்களில், சாதனா சர்கம் உச்சரிப்பில் சொதப்பியிருந்தாலும், இசை மற்றும் வரிகள் அந்த குறைத் தெரியாமல் பார்த்துக் கொண்டன. காதலன் அல்லது கணவன் மேல் உள்ள தன்னுடைய உரிமையை (possessiveness) பாடல் வரிகள் சித்தரிக்கும்.

3. கண்ணாளனே

படம்: பம்பாய் (1995)
இசை: ஏ.ஆர்.ரகுமான்
வரிகள்: வைரமுத்து
பாடியவர்: சித்ரா

ரோஜாவிற்கு அடுத்து, மக்கள் மனதில் ரகுமான் ஒரு இசையமைப்பாளராக மேலும் தன் முத்திரையை அழுத்தம் திருத்தமாக பதிக்க முக்கிய பங்காற்றியது 'பம்பாய்' ஆல்பம். அதில் இந்த ஒரு பாடல் மிக முக்கியமானது. இப்பாடலின் சாயலிலே, 'சொல்லாமலே யார் கேட்டது' எனும் பாடல் ஒன்று பிற்பாடு வெளிவந்தது. ஆனால், இந்த பாடல் போல பிரபலம் அடையவில்லை.


4. எவனோ ஒருவன்

படம்: அலைபாயுதே (2000)
இசை: ஏ.ஆர்.ரகுமான்
வரிகள்: வைரமுத்து
பாடியவர்: சுவர்னலதா

தனிமையில் இருக்கும்போது கேட்க வேண்டிய பாடல். காதலர்கள் பிரிந்த வலியை சித்தரிக்க இப்பாடலுக்கு நிகர் வேறெந்த பாடலும் கிடையாது. பிரிந்த காதலர்களின் நெஞ்சை கணமாக்கி கண்டிப்பாக அவர்களின் கண்களில் கண்ணீரை மல்க வைக்கும் ஒரு அற்புத படைப்பு. துயரம், தேடல், ஏக்கம் போன்ற உள்ளுணர்வுகளை தன் குரலின் மூலம் சுவர்னலதா பரை சாற்றியிருப்பார். இப்போது இவர் உயிரோடு இல்லையென்றாலும் தனது பாடல்களின் வழி நம்மிடையே எப்போதும் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார். இவர் இல்லாமை தமிழ் சினிமா இசைத் துறைக்கும் சரி நமக்கும் சரி ஈடுகட்ட முடியாத இழப்பு. இசையைப் பற்றி நான் சொல்லிதான் அறிய வேண்டும் என்றில்லை. எப்பேற்பட்ட உணர்சியையும் இசையால் வெளிகொண்டு பிரதிபலிக்க முடியும் என்பதற்கு இப்பாடலின் இசை ஒரு சான்று.

7. ஒரு தெய்வம் தந்த பூவே

படம்: கண்ணத்தில் முத்தமிட்டால் (2002)
இசை: ஏ.ஆர்.ரகுமான்
வரிகள்: வைரமுத்து
பாடியவர்: சின்மயி

இப்பாடலில் வரும் அனைத்து அம்சங்களும் அபாரம். வளர்ப்பு மகளைப் பற்றி மிக அழகாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் பாடுவது போல் காட்சி அமைந்திருக்கும். சோகம், பெருமை, இன்பம் போன்ற உணர்வுகளின் கலவைகளை இப்பாடலில் சின்மயி கனகட்சிதமாக வெளிபடுத்தியிருப்பார். ரகுமான் அறிமுகப்படுத்திய பல பாடகர்களில் சின்மயி நமக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்.

5. உன்னை நான் சந்தித்தேன்

படம்: ஆயிரத்தில் ஒருவன் (1965)
இசை: எம்.எஸ் விஸ்வநாதன்
வரிகள்: வாலி
பாடியவர்: பி.சுசிலா

ஒரு பக்க காதல் கொண்டு கதாநாயகி நாயகனை எண்ணி உறுகி பாடும் வண்ணமாக இப்பாடல் அமைந்திருக்கும். அதே சமயம், எம்.ஜி.ஆர் அவர்களை நிஜத்திலும் படத்திலும் பிரதிபலிக்கும் விதமாக வரிகள் எழுதப்பட்டிருக்கும். என்ன சொல்வது, அவர் உண்மையிலே ஆயிரத்தில் ஒருவன்(ர்) தான். பி.சுசிலா அவர்கள் இப்பாடலுக்கு குரல் கொடுத்தார் என்று சொல்வதைவிட உயிர் கொடுத்தார் என்று சொன்னால் அது மிகையாகாது.


5. செந்தூரப் பூவே

படம்: 16 வயதினிலே (1977)
இசை: இளையராஜா
வரிகள்: கங்கை அமரன்
பாடியவர்: எஸ்.ஜானகி

தமிழ் பாடல்கள் இருக்கும் வரை, எஸ்.ஜானகி அவர்களின் குரல் அவர் பாடல்களின் வழி நம்மிடையே வேரூன்றி நிற்கும். என்ன ஒரு குரல்வளம். இன்னும் நூராண்டிற்கு பிறகு கேட்டாலும் அதே பிரமிப்பைத் தரக் கூடிய குரல். இப்பாடல் இவருக்கு தன் முதல் தேசிய விருதைப் பெற்று தந்தது.


6. உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல

படம்: இதய கமலம் (1965)
இசை: கே.வி மஹாதேவன்
வரிகள்: கண்ணதாசன்
பாடியவர்: பி.சுசிலா

பி.சுசிலா அவர்களிடமிருந்து மற்றுமொறு அரிய குரல் விருந்து. காதலன் அல்லது கணவனை நினைத்து உருகி, ஏங்கி பாடும் விதமாக இப்பாடல் அமைக்கப்பட்டிருக்கும். இசை, பாடல் வரிகள், பி.சுசிலா அவர்களின் குரல் அனைத்துமே காலத்தால் அழியாதவை.

8. நினைக்க தெரிந்த மனமே

படம்: ஆனந்த ஜோதி (1963)
இசை: எம்.எஸ் விஸ்வநாதன் ராமமூர்த்தி
வரிகள்: கண்ணதாசன்
பாடியவர்: பி.சுசிலா

மீண்டும் பி.சுசிலா அவர்கள் பாடிய பாடல். என்ன சொல்வது, இவரது குரலில் உள்ள ஈர்ப்பு, தெள்ளத்தெளிவான உச்சரிப்பு, காட்சியுடன் ஒன்றி பாடும் விதம் அனைத்துமே இனிவரும் பாடகர்களுக்கு நிச்சயமாக ஒரு முன்னுதாரணம். என்ன தான் பாடல் கேட்க சோகமான தொணியில் இருந்தாலும், அதில் சம்பந்தபட்டவரை மறந்துவிடு என்று தன்னை தானே திட்டி ஆதங்கப்படும் விதமாக வரிகள் செதுக்கப்பட்டிருக்கும்.

10. உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு

படம்: அமர்களம் (1999)
இசை: பரத்வாஜ்
வரிகள்: வைரமுத்து
பாடியவர்: சித்ரா

'தல' பாட்டு இல்லையென்றால் எப்படி. அதற்காக மட்டும் இப்பாடலை நான் பட்டியலில் சேர்க்கவில்லை. இசையமைப்பாளர் பரத்வாஜ் அவர்களை தூக்கிவிட்ட அமர்களம் ஆல்பத்தில் அடங்கிய இப்பாடலை அடிக்கடி கேட்பேன்; எனக்குள்ளே பாடிக் கொள்வேன். காதலி தன் காதலனைப் பார்த்து பெருமைபட்டு, அவனோடு வாழப்போகும் தருணங்களை நினைத்து பாடும் விதம் அருமை. சித்ரா அவர்கள் மிக அழகாக ஆர்பாட்டமில்லாமல், பரவசமாகவும் உல்லாசமாகவும் பாடி கேட்பவர்களின் செவிகளுக்கு இனிமை சேர்த்துவிடுவார். அவருக்கு 'சின்ன குயில்' என்ற அடைமொழி கண்டிப்பாக பொருத்தமானதே.
இப்பாடலில் தல-ஷாலினி அன்னி 'கெமஸ்டிரி' அற்புதம். அஜித் இப்பாடலில் அத்தனை அழகாக இருப்பார்.


ஏற்கனவே சொன்னது போல, என்னைக் கவர்ந்த பாடல்கள் இன்னும் பல.
'Honorable mentions'-ஆக இவற்றையும் சேர்த்துள்ளேன். மன்னிக்கவும்.

11. எங்கே எனது கவிதை (கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்)
12. மார்கழி திங்கள் அல்லவா (சங்கமம்)
13. மார்கழி பூவே (மே மாதம்)
14. கண்ணாமூச்சி ஏனடா (கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்)
15. புல்வெலி புல்வெலி (ஆசை)
16. சின்ன சின்ன ஆசை (ரோஜா)
17. அன்று ஊமை பெண் அல்லோ (பார்த்தால் பசி தீரும்)
18. போறாலே பொண்ணு தாயி (கருத்தம்மா)
19. அக்கம் பக்கம் (கிரீடம்)
20. தூது செல்ல ஒரு தோழி (பச்சை விளக்கு)

நண்பர் ராஜா அவர்களுக்கு:-
தாமதத்திற்கு மன்னிக்கவும். கடந்த இரு மாதங்களாக பல பிரச்சனைகள். கடந்த வாரம் எனது பாட்டி சிவபாதம் அடைந்தார். வேலை பலு ஒரு பக்கம். எனெனில், நீங்கள் அழைத்த கனமே எழுத முடியவில்லை.

அனைவருக்கும் எனது 2011 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். :)
இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க. __/\__